
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மீது தாக்குதல் ஏற்படுத்தியதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 9 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
காவல் துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்? கோவிலுக்குள் விசாரணை என்ற பெயரில் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கியது யார்?
நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலக அதிகாரி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது உண்மையா? உண்மையாக இருப்பின் தலைமை செயலக அதிகாரி யார்?
இரும்புக் கம்பியால் சரமாரியாக அடித்தும் மிளகாய் பொடி கலந்த தண்ணீரைக் குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பிறகு உடனடியாக ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் 4 மணிநேரம் போலீசாரின் டெம்போ வண்டியில் பூட்டி வைத்ததன் பின்னணி என்ன?
எளிய பின்புலம் கொண்டஇளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன? என்ற ஏளனமான எண்ணமா அல்லது உயிர் பிரிந்து விட்டது எனத்தெரிந்து தடயங்களை அழிக்கவும் கட்டுக்கதைகளை புனையவும் காவல்துறைக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4 மணிநேரமா?
4 மணிநேரம் தாமதமாக அழைத்துவந்த காரணத்திலாலும் சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துவுள்ள காரணத்திலாலும் அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும் மானாமதுரை மருத்துவமனையும் மறுத்துவிட்டதால் மதுரை வரை சென்று தனியார் மருத்துவமனையில் அஜித்குமாரை சடலமாக காவல் துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?
அஜித்குமாரின் இறப்புக்கு காவல் துறையினர் காரணம் இல்லையென்றால் 6 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏன்?
அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை?
அஜித்குமாரின் பெற்றோர் எவ்வித போராட்டமும் செய்யாமல் இருக்க காவல்துறையினருடன் இணைந்து திமுகவும் சமரசம் செய்வது எவ்வித அராஜகம் இது?
இதுவரை திமுக ஆட்சியில் 24க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ள நிலையில் இதனை வேடிக்கை மட்டும் பார்ப்பது தான் முதல்வரின் வேலையா?
இந்த தொடர் மரணங்களுக்கு முதல்வர் கூறப்போகும் பதில் என்ன? என்றும் இதற்கெல்லாம் தார்மீக பொறுப்பு ஏற்பது எப்போது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.