
அண்மை காலமாகவே அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் மலரும் என பல்வேறு கருத்துகள் எழுந்து வந்தன, இந்நிலையில், திடீர் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி 45 நிமிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மூலம் மீண்டும் கூட்டணி உருவாகிறதா என்ற மிகப்பெரிய கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தமிழகத்தின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி பயணம் செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ..
இதையெடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முக்கியமானவர்களை சந்திக்க வந்த உள்ளீர்களா என்று கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலகத்தை பார்ப்பதற்காகவே வந்திருக்கிறேன் என்று மட்டுமே கூறினார்.
இதற்குப்பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் கே.பி முனுசாமி அன்று மாலையே டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இரவு 8 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும், உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பானது இரண்டு மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷா 15 நிமிடங்கள் தனியாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 2026 தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு மது வெல்லமும், ஊழல் புழலும் முடிவுக்கு வந்துவிடும் என தமிழிலும் இந்திலும் பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு, கல்வி நிதி, இரு மொழி கொள்கை ,நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கோதாவரிகாவிரி இணைப்பு திட்டம், போன்ற மக்கள் பிரச்சணைகளை பேசுவதற்காக மட்டுமே சென்றேன், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.
இருப்பினும் அமித்ஷாவின் X தள பதிவை குறிப்பிட்டு எழுப்பட்ட கேள்விக்கு ”தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்”.
தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்” என்று தெரிவித்தார்.மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பியகேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.
அதிமுக – பாஜக கடந்த கால உறவு
1998 ல் மக்களவைத் தேர்தலின்போது, பாரதிய ஜனதாவுடன் முதன்முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. ஆனால், 1999 ல் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கான ஆதரவை அதிமுக திரும்பப் பெற்றது. இதையடுத்து, அப்போதைய வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தது அதிமுக. அதன்பின், ஜெயலலிதா மறைவு வரை பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா? லேடியா என்ற முழக்கத்துடன் ஜெயலலிதா பரப்புரை செய்தார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக தனித்தே போட்டியிட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக இணைந்து போட்டியிட்டன. அந்த கூட்டணியில் அதிமுக , பாமக , பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இருந்தன.
அந்த தேர்தலில் இந்த கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது, குறிப்பாக தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ஓ.பி ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றி பெற்றார்.
அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியில் தேர்தலை சந்தித்து அதிமுக 66 இடங்களும் பாமக ஐந்து இடங்களையும் பாஜக நான்கு இடங்களை பிடித்தன….
ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக அதிமுக இடையே உரசல்கள் ஏற்பட்டன . முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை , ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் அதிமுகவில் கோபத்தை ஏற்படுத்தியது….
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற மாநாட்டை அதிமுக நடத்தியது . இந்த மாநாட்டை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அண்ணாமலை விமர்சித்து பேசியது அதிமுக தலைவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது . அதனால் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டி அதிமுக பாஜகவின் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக இபிஎஸ் அறிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது இரு கட்சிகளுமே வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. ஆனால் இதற்குப் பிறகும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வந்தனர்.
ஆனால் கடந்த சில தினங்களாக பாஜகவுடன் கூட்டணி அமையுமா? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அதை மறுக்காமல், கூட்டணி பொறுத்து எல்லாம் தேர்தல் நடத்தி தான் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிச்சாமி சொல்ல ஆரம்பித்தார் . இதற்கிடையில் கோயம்புத்தூர் வந்த அமித்ஷாவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்த நிகழ்வு நடைபெற்றது..
தற்போது ஈபிஎஸ்யை தொடர்ந்து அண்ணாமலையும் டெல்லி சென்றுள்ளார். பயணம் குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் பின்னர் சந்திப்போம் என்று மட்டுமே கூறியிருந்தார். அதையெடுத்து சென்னையில் செய்த்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துதை இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். மேலும் அதிமுகாவுடன் கூட்டணி அமைந்தால் பாஜக மாநில தலைவர் பதவி ராஜினாம செய்வேன் என்றும் கூறினார் அண்ணாமலை.
இதற்கு முன்பு அதிமுக முக்கிய தலைவர்களை பற்றி அண்ணாமலை பேசிய கருத்தே அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முறிவுக்கு காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்பொழுதே மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்றுங்கள் என்ற கோரிக்கையும் அதிமுக முன் வைத்த நிலையில் அதனை பாஜக ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது அதிமுகாவின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது, என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தாலும் இந்த தேர்தல் நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணையும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.