
மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படலாம்? இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 7 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் பயணமாக டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திந்து பேசி வந்தனர்.
இதையெடுத்து அமித்ஷா தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 2026 தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு மது வெல்லமும், ஊழல் புழலும் முடிவுக்கு வந்துவிடும் என தமிழிலும் இந்திலும் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசவே உள்துறை அமைச்சரை தான் சந்தித்ததாகவும் கூறினார்..
மேலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.
இருப்பினும் இந்த சந்திப்பில் அரசியல் கூட்டணி குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பயணம் குறித்து எந்த விதமான கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் அண்ணாமலை.
இதையெடுத்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திந்த அண்ணாமலை “ அதிமுக பாஜக இடையிலான கூட்டணி குறித்த கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கருத்தை இறுதியாக எடுத்துக்கொள்ளுங்கள்.மேலும் மாநில தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
கடந்த காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடதக்கது.
அதிமுக – பாஜக கடந்த கால உறவு
1998 ல் மக்களவைத் தேர்தலின்போது, பாரதிய ஜனதாவுடன் முதன்முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. ஆனால், 1999 ல் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கான ஆதரவை அதிமுக திரும்பப் பெற்றது. இதையடுத்து, அப்போதைய வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தது அதிமுக. அதன்பின், ஜெயலலிதா மறைவு வரை பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக இணைந்து போட்டியிட்டன. அந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.
அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியில் தேர்தலை சந்தித்து அதிமுக 66 இடங்களும் பாமக ஐந்து இடங்களையும் பாஜக நான்கு இடங்களை பிடித்தன….
ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக அதிமுக இடையே உரசல்கள் ஏற்பட்டன . முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அண்ணாமலை விமர்சித்து பேசியது அதிமுக தலைவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .
இதையெடுத்து அதிமுக பாஜகவின் கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறுவதாக இபிஎஸ் அறிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது இரு கட்சிகளுமே வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.
பாஜக கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் கனிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து எழுந்தது, இதையெடுத்து தமிழ்நாடு பாஜக முக்கிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது…அவர்களும் இதே கருத்தை சொன்னதால் அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த முடிவிற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கோயம்புத்தூர் வந்த அமித்ஷாவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனியாக சந்தித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்த நிகழ்வு நடைபெற்றது..
அதிமுக முக்கிய தலைவர்களை பற்றி அண்ணாமலை பேசிய கருத்தே அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முறிவுக்கு காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்பொழுதே மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்றுங்கள் என்ற கோரிக்கையை அதிமுக முன் வைத்த நிலையில் அதனை பாஜக ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது அதிமுகாவின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது, என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. 2026 அதிமுக பாஜக தேர்தல் கூட்டணிக்கான அடிப்படையில் தான் அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்த மாநில தலைவர் பரிந்துரையில் நயினார் நாகேந்திரன்,வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.