
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 முதல் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், பிசிசிஐ (BCCI) வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஆடை, பயணம், பயிற்சி, அணியுடமை உள்ளிட்ட பல அம்சங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் நடப்பு ஐபிஎல் சீசனில் அமலுக்கு வரும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்:
- அணிக்காக பயண கட்டுப்பாடு – போட்டி நடைபெறும் நாட்களிலும், பயிற்சிக்காக மைதானம் வரும் போதும் வீரர்கள் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
- குடும்பத்தினர் வருகை இல்லை – வீரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மைதானத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல், டிரெஸ்ஸிங் ரூமிற்குள் அவர்கள் செல்லவும் அனுமதி இல்லை.
- விளம்பர பலகையை அடிக்க தடை – பேட்ஸ்மேன்கள் பெளண்டரிக்குச் செல்லும் போது விளம்பர பலகைகளை அடிக்கக் கூடாது.
- ஜெர்சி எண் மாற்ற விதிமுறை – வீரர்கள் தங்கள் ஜெர்சி எண்களை மாற்ற வேண்டுமென்றால், போட்டிக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே பிசிசிஐக்கு அறிவிக்க வேண்டும்.
- அணியுடன் வரும் உறுப்பினர்களுக்கான வரம்பு – ஒவ்வொரு அணியிலும் மருத்துவர், உதவியாளர் உள்ளிட்ட 12 பேருக்கு மட்டுமே அனுமதி. கூடுதல் உறுப்பினர்கள் தேவைப்பட்டால், பிசிசிஐ அனுமதி பெற வேண்டும்.
- போட்டிக்குப் பிறகு பயிற்சி உடை அணிய தடை – போட்டிக்குப் பிறகு நடைபெறும் நிகழ்ச்சிகளில், பயிற்சி உடை அணிய வீரர்கள் அனுமதி இல்லை.
- சிறப்பு தொப்பி கட்டுப்பாடு – அதிக ரன்கள் அடித்த வீரர், அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் ஆகியோருக்கு BCCI வழங்கும் சிறப்பு தொப்பியை குறைந்தது 2 ஓவர்கள் போட்டி நடைபெறும் போது அணிய வேண்டும்.
- LED விளம்பர பலகை பாதுகாப்பு – பயிற்சியின் போது LED ஸ்பான்சர்ஷிப் போர்டுகளில் பந்துகளை அடிக்க வேண்டாம்.
- அடையாள அட்டை கட்டாயம் – அணியுடன் வரும் துணை ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிய வேண்டும்.
- பயிற்சி கட்டுப்பாடு – போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்தின் எந்த இடத்திலும் பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி சோதனைகளை மேற்கொள்ளவும் அனுமதி இல்லை.
- வலைப்பயிற்சிக்கான விதிமுறைகள் – மைதானத்தில் வலைப்பயிற்சி செய்யும் போது, ஒரு பக்க பிச்சை மட்டுமே பயன்படுத்த அனுமதி. எந்த அணிக்கும் கூடுதல் பயிற்சி நேரம் வழங்கப்படாது.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா கடும் தோல்வி அடைந்ததை அடுத்து, BCCI வீரர்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் வீரர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் முதல் முறை விதி மீறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறை விதி மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.