லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையா? – டிஎஸ்பி உட்பட 7 பேர் இடம்மாற்றம்!

Seven police personnel, including a DSP, transferred over alleged involvement in illegal lottery ticket sales.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பல்வேறு புகார்கள் அளித்து வந்தனர்.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த நசீர் என்கிற சம்புபாய் என்பவரை, லாட்டரி சீட்டு விற்றதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, லாட்டரி சீட்டு விற்பனைக்கு யார் யார் உதவியுள்ளனர், யாருக்கு யாருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை நசீர் ஆதாரங்களுடன் போலீசாரிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தகவலின் அடிப்படையில், கடலூர் எஸ்பி ஜெயக்குமார், இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி உமா மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பினார்.

அதன் பேரில், ஐஜி உத்தரவின் அடிப்படையில் சிதம்பரம் உட்கோட்ட டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கணேசன், நடராஜன், காவலர் கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்தி ஆகிய 7 பேரும் வேலூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர்.

இதனுடன், சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த நசீர், இசை சரவணன், கிருபாகரன், முருகன் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து எஸ்பி ஜெயக்குமார் உட்பட சிதம்பரத்தில் பணியாற்றும் 6 அதிகாரிகள், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்பதால் அவர்கள் வேலூருக்கு மாற்றப்பட்டனர். விசாரணையில் குற்றச்சாட்டு உண்மையாகத் தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் டிஎஸ்பி உட்பட 7 அதிகாரிகள் பணி மாறுதல் செய்யப்பட்ட சம்பவம், கடலூர் மாவட்ட காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.