
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் நான்கு நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. விசாரணையில், கொல்லப்பட்டவர் நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்த ஜெயராமன் என்பதும், அவர் சென்னையிலேயே கொலை செய்யப்பட்டு, கார் மூலம் கோவைக்கு கொண்டு வந்து, நண்பர்கள் வேலை செய்திருந்த தோட்டத்து கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் பாளையங்கோட்டையை சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் செட்டிபாளையம் போலீசில் சரணடைந்தனர். அப்போது சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, இவர்களை மட்டுமே குற்றவாளிகளாக கருதி வழக்கை முடிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், மாவட்ட எஸ்பி கார்த்திகேயனின் அனுமதியுடன், இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் தனிப்படை மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஜெயராமனை சென்னையில் பாளையங்கோட்டையை சேர்ந்த நியூட்டன், பெனிடோ ஆகியோர் கொலை செய்ததும், சடலத்தை கார் மூலம் கொண்டு வந்து, பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் கிணற்றில் போட்டதும் உறுதியானது.
மேலும், போலி கொலையாளிகளாக சரணடைய பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதும், அவர்களை வைத்து வழக்கை மூட திட்டமிட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து, சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மீது நடவடிக்கை எடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.