
கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.
அதே வேளையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ராணுவ பலம் என்ன? என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம்….
ராணுவ வீரர்கள் எண்ணிக்கை
சர்வதேச அளவில் மனிதவளத்தில் பெரும் சக்தியாக இருக்கும் இந்தியா, ராணுவ பலத்திலும் பாகிஸ்தானை விஞ்சும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
குளோபல் ஃபயர்பவர் ஸ்ட்ரென்த் தரவரிசைப்படி, உலகின் பலம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உ ள்ளது. மொத்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது, இந்தியாவிடம் 51 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். அதில், 14 லட்சத்து 55 ஆயிரத்து 550 ராணுவ வீரர்கள் எந்த நேரத்திலும் போருக்கு தயார் என்ற நிலையிலும், சுமார் 12 லட்சம் பேர் ரிசர்வ் படையிலும் உள்ளனர்.
ஆனால் பாகிஸ்தானிடமோ, வெறும் 6 லட்சத்து 54 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இதேபோல், இந்தியாவில் 25 லட்சத்து 27 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உள்ள நிலையில், பாகிஸ்தானில் 5 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இந்தியா 3 லட்சத்து 10 ஆயிரத்து 575 விமானப்படை வீரர்களை கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானோ 78 ஆயிரத்து 128 விமானப்படை வீரர்களை மட்டுமே வைத்திருக்கிறது.
இராணுவ வீரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் பலம் பாகிஸ்தானைவிட இருமடங்கு அதிகமாக இருக்கிறது.
இரு நாடுகளும் வலிமையான திறன்களைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் பரந்த பொருளாதார அடித்தளமும். பன்முகப்படுத்தப்பட்ட ராணுவ உள்கட்டமைப்பும் ஒரு தனித்தன்மையுடன் விளங்குகிறது.
இந்தியா – பாகிஸ்தான் ராணுவ பட்ஜெட்
இந்தியா தனது ராணுவத்திற்கு, பாகிஸ்தானை விட பல மடங்கு பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கி சர்வ பலம் வாய்ந்த ராணுவம் என்ற கம்பீரத்துடன் உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4.2 டிரில்லயன் அமெரிக்க டாலராக உள்ளது. பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தி வெறும் 374 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
ராணுவத்திற்கான வருடாந்திர செலவுகளில் இந்தியா சர்வதேச அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது, ராணுவத்திற்கு மட்டும் இந்திய அரசு 81.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசோ தனது ராணுவத்திற்கு வெறும் 10.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே நிதி வழங்குகிறது.
அணு ஆயுதங்கள்- யாருக்கு பலம்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவாகி உள்ள சூழலில், அணு ஆயுதப் பயன்பாடு குறித்த அச்சமும் எழுந்துள்ளது. தேவைப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருக்கிறார். எனவே தற்போது அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவிடம் தற்போதைக்கு 160 முதல் 170 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அணு ஆயுத திறன் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்ல தேவையான ஏவுகணைகள் நம்மிடம் இருக்கின்றன. குறிப்பாக அக்னி வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 700 கிலோ மீட்டர் தூரம் முதல் அதிகபட்சமாக 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று இலக்குகளை தாக்கக்கூடியதாகும்.
அதே போல் பாகிஸ்தானிடமும் 165 முதல் 170 எண்ணிக்கை வரை அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும் இவற்றால் நீண்ட தூரத்திற்கு போக முடியாது. குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரத்தில் மட்டுமே இந்த ஏவுகணைகள் பயணிக்கும். இந்தியாவை விட பாகிஸ்தானிடம் கூடுதலாக அணு ஆயுதங்கள் இருந்தாலும்கூட, இந்தியாவின் ராணுவ பலத்தை அவர்களால் சமாளிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
விமானப்படை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தரப்பிலான நடவடிக்கைகள் பாயும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்திய விமானப்படையின் வலிமை, பாகிஸ்தானை விட நம்ப முடியாத அளவுக்கு உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்தியாவிடம் உள்ள 2 ஆயிரத்து 220 விமானங்களில், 600 போர் விமானங்களும், 130 தாக்குதல் விமானங்களும், 351 பயிற்சி விமானங்களும், 899 ஹெலிகாப்டர்கள் மற்றும் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் உள்ளன.
இந்தியாவிடம் மிகவும் அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்கள் கைவசம் உள்ளன. இந்த வகை விமானங்கள் மணிக்கு 2 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து இலக்குகளை தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
3ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும். ரஃபேல் போர் விமானங்கள் 16 டன் வரை குண்டுகள், ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. 60,000 அடி உயரத்தில் இருந்து இவற்றை இயக்க முடியும்.
ஆனால், பாகிஸ்தானிடம் இந்தியாவின் ரஃபேல் விமானங்களை நேரடியாக எதிர்கொள்ளும் வலிமை இல்லை என்றே சொல்லலாம்.
பாகிஸ்தானிடம் வெறும் 1400 விமானங்கள் மட்டுமே உள்ளன. இதில் 400 போர் விமானங்களும், 90 தாக்குதல் விமானங்களும், 300 ஹெலிகாப்டர்கள் மற்றும் 57 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மட்டுமே இருக்கின்றன.
விமானப்படைகளின் வலிமையில் இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கையில், பாகிஸ்தான் எங்கேயோ இருக்கிறது.
கப்பல் படை
பாகிஸ்தானை விட இந்திய கடற்படையும் மிகவும் சக்தி வாயந்ததாகவும், அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டதாகவும் இருந்து வருகிறது. மேலும், இந்தியாவிடம் கப்பல்களின் எண்ணிக்கையும் பாகிஸ்தானைவிட அதிகமாகவே இருக்கிறது.
இந்தியாவிடம் 2 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. 262 மீட்டர் நீளமுள்ள INS Vikrant-ல் 26 போர் விமானங்களும். 10 ஹெலிகாப்டர்களையும் நிலை நிறுத்தலாம்.
இதேபோல், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பிரமாண்ட போர்க்கப்பலும் எதிரி நாட்டுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்தியாவிடம் 293 கப்பல்கள் உள்ளன. அதில், 13 தாக்குதல் கப்பல்களும், 14 போர்க்கப்பல்கள், 18 கார்வெட்டுகள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 135 ரோந்து கப்பல்கள் உள்ளன.
ஆனால், பாகிஸ்தானிடமோ 9 போர்க்கப்பல்கள், 9 கார்வெட்டுகள், 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 69 ரோந்து கப்பல்கள் மட்டுமே உள்ளன. பாகிஸ்தானிடம் விமானம் தாங்கி கப்பல்கள் ஒன்றுகூட இல்லை. இதனால் கடல்வழியாக தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தால், இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும் என கூறப்படுகிறது.
டாங்கிகள் மற்றும் பீரங்கிகள்
டாங்கிகள் மற்றும் பீரங்கிகளின் எண்ணிக்கையிலும் இந்தியா பாகிஸ்தானைவிட கூடுதல் எண்ணிக்கையில் உள்ளது.
இந்தியாவிடம் 4 ஆயிரத்து 800 டாங்கிகள், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், 100 சுயமாக இயங்கும் பீரங்கிகள், 3 ஆயிரத்து 975 இழுவை பீரங்கிகள் மற்றும் 264 ராக்கெட் பீரங்கிகள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீரங்கிகள் உள்ளன.
அதேசமயம், பாகிஸ்தானிடம் 2 ஆயிரத்து 500 டாங்கிகள், 4 ஆயிரம் கவச வாகனங்கள், 662 சுயமாக இயங்கும் பீரங்கிகள், 2 ஆயிரத்து 629 இழுவை பீரங்கிகள் மற்றும் 600 ராக்கெட் பீரங்கிகள் என மொத்தம் 5 ஆயிரம் பீரங்கிகள் மட்டுமே உள்ளன.
ஆக மொத்தத்தில், இந்திய தரைப்படைகள், பாகிஸ்தானைவிட பெரியதாகவும், சிறந்த ஆயுதம் ஏந்தக்கூடியதாகவும் மற்றும் சிறந்த முறையில் செயல்படக்கூடிய வகையிலும் இருக்கிறது.
ஏவுகணை திறன்கள்
இந்தியாவின் ஏவுகணை வலிமை தடுப்பு மற்றும் துல்லியமான தாக்குதல்கள் இரண்டிலும் பாகிஸ்தானை விட வலிமைமிக்கதாகவே உள்ளது.
இந்தியாவிடம் பாகிஸ்தானால் நெருங்க கூட முடியாத வகையில் நம் நாட்டிடம் பிரித்வி 3 ஏவுகணை, பராக் 8 ஏவுகணை, கே 4 ஏவுகணை, அக்னி 5, பிரமோஸ் ஏவுகணை உள்பட பல ஏவுகணைகள் உள்ளன. பிரித்வி 3 ஏவுகணை, வெடிப்பொருட்கள், ரசாயன ஆயுதம் முதல் அணுஆயுதம் என 500 முதல் 1000 கிலோ எடையை சுமந்து சென்று துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். போர்க்கப்பல்களில் இருந்து பராக் ஏவுகணையை ஏவும்போது அது வானில் பறந்து எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது
இந்தியாவின் அதிகசக்தி வாய்ந்த ஏவுகணையான அக்னி 5 ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகையாகும். இதன் ரேஞ்ச் என்பது 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டராகும். பிரமோஸ் ஏவுகணை தரை மற்றும் கடலில் இருந்து வெறும் 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் இலக்கை தாக்கி அழிக்கும்.
அதே வேளையில் பாகிஸ்தானிடம், 2 ஆயிரத்து 750 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட ஷாகின் உள்ளிட்ட ஏவுகணைகள் இருந்தும், இந்தியாவை ஒப்பிடும்போது அதன் பலம் குறைவாகத்தான் உள்ளது என்றே சொல்லலாம்.
காஷ்மீர் பஹால்காம் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் உடனான உறவை முறித்த இந்தியா, பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு, பாகிஸ்தானை திக்குமுக்காட செய்துள்ளது.
அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை விட முன்னிலையில் இருக்கும் இந்தியாவின் கை, ராணுவ பலத்திலும் உயர்ந்தே இருக்கிறது. இருநாடுகளின் ராணுவ பலத்தை ஒப்பிடும் போதும் இந்தியா அதிநவீன மற்றும் கூடுதல் எண்ணிக்கையில் பலம் பொருந்தியதாக விளங்கி வருகிறது.
| கோப்பு | இந்தியா | பாகிஸ்தான் |
| மனிதவள | 51 லட்சம் ராணுவ வீரர்கள், 14 லட்சம் போருக்கு தயார் | 6.5 லட்சம் ராணுவ வீரர்கள் |
| ராணுவ பட்ஜெட் | $81.4 பில்லியன் (5வது இடம்) | $10.3 பில்லியன் |
| அணு ஆயுதங்கள் | 160-170 | 165-170 |
| அணு ஆயுத ஏவுகணைகள் | அக்னி, பராக், பிரித்வி 3, பிரமோஸ், அக்னி 5 | ஷாகின் (2,750 கிலோமீட்டர்) |
| விமானப்படை | 2,220 விமானங்கள் (600 போர் விமானங்கள், 36 ரஃபேல்) | 1,400 விமானங்கள் (400 போர் விமானங்கள்) |
| கடற்படை | 293 கப்பல்கள் (2 விமானம் தாங்கி கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள்) | 9 போர்க்கப்பல்கள், 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் |
| டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் | 4,800 டாங்கிகள், 10,000 பீரங்கிகள் | 2,500 டாங்கிகள், 5,000 பீரங்கிகள் |
| போரும் பாதுகாப்பும் | பெரும்பாலும் பரந்த பொருளாதார அடித்தளம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் | மெல்லிய பொருளாதார அடித்தளம், ஆயுதங்களில் திறனோடு |