‘நானே உண்மையை சொல்கிறேன்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம்!

"Sathankulam case sees sudden twist as key person claims 'I'm telling the truth'"

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்த காரணத்தால், செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணையின் பெயரில் கொடூரமாக தாக்கி கொன்றனர்.

இந்த சம்பவம் அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகள் நியாயம் கேட்டு போராட்டங்கள் நடத்தின. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது போலீசார் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் திடீரென அப்ரூவர் ஆகி ‘உண்மையை சொல்கிறேன்’ என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கில் இப்போதெல்லாம் மறைந்துபோயிருந்த பரபரப்புக்கு புதுசாக திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.