
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன், அவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு முருகேசன் மற்றும் பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். முருகேசன் கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவில் வேலை செய்து வந்துள்ளார்.
ஊரில் இருந்த முருகேசனின் மனைவி விமலா ராணிக்கும், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த தம்பி பாஸ்கரனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் இருவரையும் கண்டித்தனர். ஆனால் பாஸ்கரனும் விமலா ராணியும் உறவை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பெற்றோர் இவ்வாறு நடைபெறுவதை முருகேசனிடம் தெரிவித்தனர். இதைக் கேட்ட முருகேசன் கடும் ஆத்திரமடைந்து, தம்பியை தீர்த்துக் கட்ட வேண்டும் என முடிவு செய்தார்.
இதற்கான திட்டம் தீட்டிய முருகேசன், கடந்த 26 ஆம் தேதி இரவு ஊரில் சேர்ந்தார். 27ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாஸ்கரனின் தலையில் கல்லால் தாக்கிய பிறகு, கழுத்தை கயிற்றால் நெறித்து கொலை செய்தார்.
இந்த சம்பவத்தில் தாய் வசந்தா மற்றும் தந்தை வீரப்பனும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாஸ்கரனின் உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றி 300 மீட்டர் தூரம் சென்று சாலையோரம் வீசி விபத்து போல சித்தரித்தனர்.
முதலில் இது விபத்து என நம்பிய போலீசார், உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பினர். ஆனால் உடற்கூராய்வு அறிக்கையில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் முருகேசனும், பெற்றோரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மேலும், முருகேசனின் மனைவி விமலா ராணிக்கும் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து முருகேசன், அவரது மனைவி விமலா ராணி, தாய் வசந்தா, தந்தை வீரப்பன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்