
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு – வசந்தா தம்பதியரின் மகள் சௌந்தர்யா, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்குள்ள மேவளூர்குப்பத்தில் தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். அதே பகுதியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் வீடு எடுத்து வேலை பார்த்து வந்தார். அருகருகே வசிப்பதால் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாகி, 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் சௌந்தர்யா வேறு ஆண் நண்பருடன் பழகுவதாக தெரிந்ததும் தினேஷ் கோபமடைந்து பலமுறை கண்டித்தார். பின்னர் சௌந்தர்யா தினேஷின் எண்ணை பிளாக் செய்து ஆண் நண்பருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 19ம் தேதி இரவு சௌந்தர்யா தனியாக இருந்தபோது தினேஷ் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறாக மாறிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்து தப்பியோடிய தினேஷ் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
நிச்சயிக்கப்பட்ட காதலியை காதலனே கொலை செய்த கொடூரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.