
திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் மூன்று தனிப்படை போலீசைக் குழுவினை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பாலமுருகன் கொல்லப்பட்டதும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர், “என் அண்ணனை கொலை செய்துவிட்டார்கள்” என அழுது புலம்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையில் தமிழரசன், நண்பர்கள் சுமன், நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்து தமிழரசனை கைது செய்தனர்.
மேலும், கேரளாவில் மறைந்து இருந்த முன்னாள் இந்து முன்னணி நிர்வாகி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவரான சுமனையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமன் மற்றும் தமிழரசன் இருவருக்கும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அஸ்வின் மற்றும் நரசிம்ம பிரவீன் தலைமறைவாக இருப்பதால், அவர்களை பிடிக்க கேரளா மற்றும் வால்பாறை பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
பணம் தொடர்பான தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவில் இருக்கும் இருவரையும் கைது செய்து விசாரிக்கும்போது முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.