
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைவாணி என்ற பெண் தலைமை ஆசிரியை பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பள்ளி நேரத்தில் தான் மேசையில் படுத்துக்கொண்டு, மாணவ, மாணவிகளிடம் கை, கால் அமுக்கச் சொல்லியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியானதால், இது தொடர்பாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் கலைவாணி மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை அப்பியம்பட்டி தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம், பள்ளி மாணவர்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், உள்ளூரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது