3 ஆவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு அரசு சலுகை?

3 ஆவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு அரசு சலுகை

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நடைபெற்ற மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில், திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன் வைத்த கோரிக்கை அனைவரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் 3 ஆவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் 

இது தொடர்பான விவாதத்தின் போது பேசிய அவர், “நாடு சுதந்திரம் பெற்ற போது பீகார் மாநிலத்தின் மக்கள் தொகையும், தமிழகத்தின் மக்கள் தொகையும் ஏறத்தாழ சமமாக இருந்தது. ஆனால் இப்போது பீகாரின் மக்கள் தொகை தமிழ்நாட்டை விட 4 கோடி அதிகமாகியுள்ளது, அத்துடன், மத்திய அரசு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தான் நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றை மேற்கொள்கின்றது. அதனால் தற்போது உள்ள நிலைமை தமிழகத்திற்கு பாதிப்பாக அமைவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது ” என தெரிவித்தார்

மேலும்  “தமிழகத்தில் ‘நாம் இருவர் நமக்கிருவர்’ என்ற நெறியை நாம் கடைபிடிக்கிறோம். ஆனால் இப்போது ‘நாமிருவர் நமக்கு மூவர்’ என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்,” என  மதியழகன் வலியுறுத்தியுள்ளார்

இதற்காக, மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள முன்வரும் புதுமண தம்பதிகளுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் எனவும், இது மக்கள் தொகையை உயர்த்துவதற்கு சிறந்த முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் முக்கிய தலைவர்களின் கவனமும் சென்றுள்ள நிலையில், தமிழக அரசு இதற்கான  அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் மாநில முதல்வர்களுடன் நடந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டாம் என  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.