
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில் கேட்டில் நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது மோதி ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ரயில்வே கேட்டை திறந்து வைத்து பணி நேரத்தில் தூங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
ரயில் வருவது குறித்து ஸ்டேஷன் மாஸ்டர் அழைத்தும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்றும், பணி நேரத்தில் ஏற்கனவே 5 முறை தூங்கிய பின்புலம் இருப்பதும் போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த பிறகே பங்கஜ் சர்மா அங்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்டை உரிய நேரத்தில் மூடாத காரணத்தால் தெற்கு ரயில்வே நிர்வாகம் பங்கஜ் சர்மாவை உடனே சஸ்பெண்ட் செய்துள்ளது. மாணவர்கள் உயிரிழந்த இந்த கொடூர சம்பவம் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் வருத்தத்தையும், கேட் கீப்பர் மீது கடும் கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது.