சாக்லேட் பாக்கெட்டில் கஞ்சா: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தேனி இளைஞர் கைது

Theni youth arrested at Pollachi railway station for smuggling ganja hidden in chocolate packets.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் சாக்லேட் கவர்களுக்குள் கஞ்சா மறைத்து கடத்த முயன்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடையாக சுற்றித்திரிந்த நபர் ஒருவரை போலீசார் தடுத்து விசாரித்ததில், அவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த திவாகர் என்ற இளைஞர் என்பதும், அவரது பையில் இருந்தது சாக்லேட் பாக்கெட் என்றும் தெரியவந்தது. ஆனால், அந்த பாக்கெட்டுகள் டேப்பால் சீலடிக்கப்பட்டிருந்ததை போலீசார் கவனித்து திறந்து பார்த்தனர்.

அதில் KitKit என்ற பெயரில் இருந்த சாக்லேட் பாக்கெட்டுகளுக்குள் கஞ்சா நிரம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திவாகரை கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி மதுரைக்கு கொண்டு சென்ற பின்னர், அங்கிருந்து ரயிலில் வந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, திவாகரிடம் இருந்த 6 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாகுமாரி தெரிவித்ததாவது, “பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்தான் இந்த போதைப் பொருள் கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டது,” என்றார்.

மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயனின் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.