மேலூர் அருகே இளம்பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை: காதலன் உட்பட 3 பேர் கைது!

News report of a young woman gang-raped near Melur; three suspects, including her boyfriend, have been arrested by the police.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (25) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு தீபன்ராஜ், அந்த பெண்ணை தனியாக வருமாறு அழைத்துள்ளார். காதலனின் அழைப்பை நம்பி அவர் வீட்டிற்கு தெரியாமல் இரவில் சென்றுள்ளார். பின்னர் தீபன்ராஜ், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து தீபன்ராஜ், தனது நண்பர்கள் திருமாறன் (22), மதன் (20) ஆகியோரை செல்போனில் அழைத்து அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அவர்கள் வந்த பிறகு மூவரும் சேர்ந்து இளம்பெண்மீது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் முயன்றும் முடியவில்லை. பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்

தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக அந்த பெண் மேலவளவு போலீஸ் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.

அந்த புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் காஞ்சனமாலா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீபன்ராஜ், திருமாறன், மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.