
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு, இந்தியாவின் முப்படைகளுக்கும் முழுமையான சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திலேயே நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்
இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் தளபதிகள், தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் பிரதமர் மோடி, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு, “இந்த தாக்குதலுக்கு பதிலடி எந்த நேரத்தில், எந்த வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்திய முப்படைகள் தாங்களாகவே தீர்மானிக்கலாம்,” எனக் கூறியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான பதிலடி நடவடிக்கைகள் எடுக்க இந்தியா தயார் நிலையில் உள்ளதாகவும், நாட்டு ராணுவ பலம் மீது தமக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
அதனால் பதிலடி நடவடிக்கையில் எந்தவித தடை இல்லாமல், மூன்றுபடைகளும் தங்களின் திட்டங்களை முழு சுதந்திரத்துடன் செயல்படுத்த மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன