
காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றும் காமராஜ், கடந்த 22 ஆண்டுகளாக இந்த துறையில் சேவை செய்து வருகிறார். அண்மையில் பதவி உயர்வு பெற்று, மாவட்ட அலுவலகத்தில் நான்கு முக்கிய பொறுப்புகளில் ஒருவராக உயர்ந்தார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே மதுபோதையில் பணிக்கு வருவது, அலுவலகத்தில் முறைகேடுகள் செய்வது வழக்கமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, அப்போது மாவட்ட அலுவலராக இருந்த ஆர்னிஷா பிரியதர்ஷினி, ஒழுங்கு நடவடிக்கையாக அவரை திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு மாற்றினார்.
ஆனால், அண்மையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் பெற்ற காமராஜ், பழைய பழக்கத்தை மீண்டும் தொடர்ந்துள்ளார்
இதன் தொடர்ச்சியாக, கடந்த சனிக்கிழமை (02.08.2025) இரவு, பணிக்கு மதுபோதையில் வந்த அவர், சக ஊழியர்களிடம் தரக்குறைவாக பேசி, அலப்பறையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடத்தையை அங்கு வந்திருந்த பொதுமக்களும் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.
பிரச்சனை அதிகரித்ததால், தகவல் மாவட்ட உயர் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. உடனடியாக, மாவட்ட துணை தீயணைப்புத் துறை அலுவலர் சங்கர், காமராஜை அரசு தீயணைப்பு வாகனத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மதுபோதையில் இருப்பதைக் கண்டறிய பரிசோதனை நடத்தினர்.
மருத்துவத் தேர்வில் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது செயல்பாடு தற்போது தீயணைப்புத் துறையில் பெரும் அதிர்வையும், உள்ளூரில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.