
தஞ்சை மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலை கணபதி நகர் கீழத்தெருவை சேர்ந்த லோகநாதனின் மகன் அறிவழகன் (49). திருமணமான இவர் மனைவியுடன் பிரிந்து தனியாக தம்பி திருவேங்கடத்துடன் (41) வசித்து வந்தார். இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு துரைராஜன், துரைமுருகன் என்ற இரு தம்பிகளும் இருக்கின்றனர்.
கடந்த 6ஆம் தேதி இரவு, துரைமுருகன் தனது தாயுடன் அண்ணன் வீட்டிற்கு சென்றபோது, திருவேங்கடம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடனே அவர் தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தை சென்றடைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், அன்று இரவு அறிவழகன் மற்றும் திருவேங்கடம் மது அருந்திக்கொண்டிருந்தபோது, கணபதி நகரில் உள்ள கடையிலிருந்து வரும் வாடகை பணத்தை எப்படி பங்கிடுவது என்று பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு வாக்குவாதமாக மாறி, ஆத்திரம் அடைந்த அறிவழகன் தம்பியை கட்டையால் தாக்கியதாக தெரிய வந்துள்ளது.
தலையில் பலத்த காயமடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அறிவழகன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தலைமறைவாக இருந்த அறிவழகனை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணன் தம்பியை அடித்துக்கொன்ற சம்பவம், தஞ்சை கணபதி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.