
நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு ஜூலை 24ம் தேதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சிட்கோவின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை, மா.சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்களின் மூலம் தனது மனைவியின் பெயருக்கு மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலி ஆவண தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி, மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துக்குட்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2019ம் ஆண்டில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஆனால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மா.சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததை அந்த நீதிமன்றம் நிராகரித்தது.
இதை அடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காரணமாக வழக்கு எடுக்கப்படவில்லை என்பதால் குற்றச்சாட்டு நடவடிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மா.சுப்பிரமணியன் தரப்பு கோரிக்கை வைத்தது.
ஆனால், சிறப்பு நீதிபதி வெங்கடவரதன், வழக்கில் மேலும் கால அவகாசம் அளிக்க முடியாது எனத் தெரிவித்து,அடுத்த விசாரணைக்குள் உச்ச நீதிமன்ற உத்தரவை பெற அறிவுறுத்தனார். இல்லையென்றால் ஜூலை 24 ம் தேதி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி மீது குற்ற சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் எனக்கூறி அன்றைய தினத்திற்கு வழக்கினை தள்ளி வைத்தார்