
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதலாவது மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது கட்சியின் சார்பில் பாராட்டி நிதியுதவி வழங்கி வருகிறார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 80 தொகுதிகளில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில் பேசும் போது, “நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், அடுத்த ஆண்டு என்ன நடக்கப் போகிறதென்று. வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டப் போகிறார்கள். அது எல்லாமே உங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் தான். இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லித் தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று கூறினார்.
பேச்சின் போது பெற்றோரிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். “உங்கள் குழந்தைகளிடம் எதிலும் அழுத்தம் கொடுக்காதீர்கள். அவர்கள் விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு பிடித்த துறையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவர்கள் கண்டிப்பாக சாதிக்கப் போகிறார்கள். அவர்களது விருப்பங்களை புரிந்து கொண்டு ஆதரவு அளியுங்கள்” என்றார்.
மேலும், சாதி மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு செய்யும் சிந்தனையை கடுமையாக கண்டித்தார். “சாதி மதத்தால் மக்களிடையே பாகுபாடு ஏற்படுத்தும் எண்ணம் நம்மிடம் நெருங்க கூடாது. அந்த எண்ணத்தை உங்கள் மனதுக்குள் கூட அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் சாதி பார்த்து பயிர் செய்கிறார்களா? தொழிலாளர்கள் சாதி பார்த்து உழைக்கிறார்களா? இயற்கையே சாதி மதம் பார்ப்பதில்லை. அதைப் போல நாமும் அந்தச் சிந்தனையை முற்றிலும் ஒதுக்கி வைக்க வேண்டும்” என்றார்.
அதே நேரத்தில், சமீபத்தில். “தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி நடந்தது. ஒன்றிய சிவில் சேவைத் தேர்விலும் சாதி சார்ந்த கேள்விகள் கேட்டதையும் கண்டிக்கிறோம். இந்த உலகத்தில் எது சரி எது தவறு என்பதை பகுத்தறிந்தால் வாழ்க்கை தெளிவாகும். எதற்கும் அதிகமான உணர்ச்சியில் ஆழ்ந்து போகாதீர்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் யோசியுங்கள்” என அறிவுரை வழங்கினார்.
அவர் உரையின் முடிவில், “வரும் காலங்களில் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள ஏ.ஐ. உலகத்தை எதிர்கொள்வதற்கான ஒரே வழி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். நாம் எவ்வளவோ பார்த்திருக்கிறோம், இதையும் சமாளிக்கலாம். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்” என தெரிவித்தார். மேலும், “நான் அடுத்த கட்டமாக மாணவர்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உள்ளேன். எனவே இன்றைய உரை அவர்களுக்கும் பொருந்தட்டும். ஒவ்வொரு முறையும் இதுபோல் அறிவுரை கூறுவது சரியானது அல்ல. உங்களுக்கும் தொந்தரவு ஆகலாம்” என தனது உரையை முடித்தார்.