கடைசி நிமிடங்களில் கூட கூட்டடினில் மாற்றங்கள் ஏற்படலாம்- நயினார் நாகேந்திரன்

Even last-minute changes in the alliance are possible – Nainar Nagendran

திருவான்மியூர் கடற்கரையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றங்கள் ஏற்படலாம்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவான்மியூர் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவது நல்ல விஷயமே. எதிர்க்கட்சிகள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு பெற்றுத் தந்தார். டி.டி.வி. தினகரன் எதற்காக என்னையும் பா.ஜ.க.வையும் விமர்சிக்கிறார் என தெரியவில்லை. 30 வருடங்களாக அவர் எனக்கு நண்பர்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், “பா.ஜ.க. ஒருபோதும் பிற கட்சிகளின் பிரச்சனைகளில் தலையிடாது. நல்லதுக்காக எது வேண்டுமானாலும் செய்வோம். எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பில் எந்த தவறும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றங்கள் ஏற்படலாம். புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல பிரச்சனைகளுக்குப் பிறகு நல்ல தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.