
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரிய குளத்துப்பட்டியில் நகைக்காக மூதாட்டி குழந்தை தெரசு (65) கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த ஊரிலேயே தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்த தெரசு, நேற்று இரவு வீட்டின் முன்பு தாழ்வாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்து கழுத்தில் இருந்த செயின், தோடு மற்றும் மூக்குத்தி என மூன்று பவுன் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
கொலைக்குப் பின் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வையம்பட்டி போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை தேடி வருகின்றனர்.
மோப்ப நாய் கொலை நடந்த இடத்திலிருந்து கல்லறை மேட்டுப்பக்கம் வரை மோப்பம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் நேரில் சென்று ஆய்வு செய்து கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
மூதாட்டி உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகைக்காக மூதாட்டி கழுத்தறுக்கப்பட்ட கொடூரம் அந்த பகுதியில் பெரும் திடுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.