
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியில் வசித்து வந்தவர் ருக்மணி (71). இவரது கணவர் அர்ஜூனன் கடந்த மாதம் காலமானார். அதன்பின் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ருக்மணியின் மகன் பாலசுந்தர் அருகே குடியிருப்பில் குடும்பத்துடன் இருந்து, தாயுக்கு தினமும் சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம்.
இந்த மாதிரி இன்று காலையும் பாலசுந்தர் தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்றபோது, வெளிக்கதவு பூட்டியிருந்தது. பலமுறை அழைத்தும் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவர் பின்வாசல் வழியாக சென்றார். அப்போது பின்கதவு திறந்த நிலையில் கிடந்தது. அருகே ருக்மணி தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
முதன்மை விசாரணையில், ருக்மணி அணிந்திருந்த 7 பவுன் செயின், 7 பவுன் வளையல்கள் உள்ளிட்ட 14 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. ஆனால், மூக்குத்தி மற்றும் கம்மல் அப்படியே இருந்ததால் கொள்ளையர்கள் நகைகளை பறிக்கும் போது ருக்மணி எதிர்த்ததால் தள்ளி அடித்து கொலை செய்து நகைகள் பறித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்திருந்தாலும் அதில் லாக்கர் பாதுகாப்பாக இருந்ததால் உள்ளே இருந்த மற்ற நகைகள் எடுக்கப்படவில்லை. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் தடயங்களை சேகரித்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளைபோன சம்பவம் வள்ளியூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.