கடனை வசூலிக்க முதியவரை கடத்தி விரலை வெட்டிய சம்பவம்;திமுக பிரதிநிதியும் கடத்தலில் தொடர்பு!

"Police rescue an elderly man whose finger was cut after being kidnapped during a loan recovery; a DMK representative is reportedly involved."

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் நடராஜன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் இருவரும் தங்களது வியாபாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 15 இலட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

அதில் 10 இலட்சம் திருப்பி கொடுத்துவிட்டனர் மீதமுள்ள 5 இலட்சம் ரூபாயை 50 ஆயிரம் வட்டியுடன் ஆறு மாதங்களில் திருப்பி தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பழனிச்சாமி என்பவர் வட்டியுடன் சேர்த்து 65 இலட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

65 இலட்சம் கொடுக்க முடியாத காரணத்தினால் நடராஜன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் இருவரும் சீர்காழியில் உள்ள நடராஜனின் மகள் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர்.

இதனை அறிந்த பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து நடராஜனை கடத்தி அவரது மகன் மணிகண்டனுக்கு போன் செய்து 65 இலட்சம் ரூபாயை கொடுத்தால் மட்டுமே  நடராஜனை உயிரோடு விடுவதாக கூறியுள்ளார்.

மேலும் பணத்தை கொடுக்க மறுத்தால்  நடராஜனை கட்டிப்போட்டு நாயை போல நாக்கால் தண்ணீர் குடிக்க வைத்து சித்திரவதை செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மணிகண்டன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்துள்ளார். நடராஜனின் மகள் சீர்காழியில் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணையை மேற்கொண்டு கடத்தல் செய்யபட்ட காரினை அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த காரானது கடலூர் மாவட்டம் காரைக்காடு பகுதிக்கு வருவதாக தெரியவந்த  நிலையில் கடலூர் முதுநகர் போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் நடராஜன் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும் நடராஜனின் விரல்கள் வெட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த காரில் திமுக கொடி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடத்தலில் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக பிரதிநிதி பாண்டியன், பன்னீர்செல்வம், தேவநாதன், மரிய செல்வராஜ், சக்திவேல் ஆகிய 5பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய பாண்டியனின் காரினை சீர்காழி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்