
சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனக்கு எம்.எல்.ஏ. பதவியை விட முக்குலத்தோர் புலிப்படை தலைமைப் பொறுப்பு தான் பெருமையாக இருக்கிறது. அதில் எனக்கு அகமகிழ்ச்சி இருக்கிறது” என்றார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக்கூடியவர். உலகத்தில் எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் நம்பிக்கை துரோகத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கான பலனை அவர் வாழும் காலத்திலேயே அனுபவிப்பார். முக்குலத்தோர் சமூகத்திற்காக பல கோரிக்கைகளை அவரது ஆட்சிக்காலத்தில் வைத்தேன். ஆனால் செவிசாய்க்கவில்லை. இப்போது தான் சமூக அக்கறை வந்தது போல நடிக்கிறார்” என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, “எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள் அடிநில மக்களுக்குப் போய் சேர்ந்துவிட்டது. நல்ல பெயர் வாங்குவதற்காக கபட நாடகம் நடத்துகிறார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தென் மாவட்டங்களில் சிலையாக நின்றாலும் வாக்கு கிடைக்காது. தன் தவறுகளை மறைப்பதற்காக பிறரை குற்றம் சாட்டும் செயலில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.
அவர் மேலும், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை யாரும் வெளியில் இருந்து அழிக்கத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியே அதனை அழித்து முடிப்பார்” எனக் கடுமையாக விமர்சித்தார்.