இடவசதி பற்றாக்குறையால்  மொட்டை மாடியில்  கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!

திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ள மாணவ‑மாணவிகள் கல்வி கற்கும் நிலையில், மொட்டை மாடி, வராண்டா, நடைபாதை போன்ற இடங்களில் அமர்ந்து பாடம் கற்பிக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பள்ளியில் 1,238 மாணவர்கள் பயின்று வருகின்றனர்; இருந்தபோதிலும், 18 வகுப்பறைகள் மட்டுமே இருக்கின்றது. மாணவர்கள் பள்ளி மைதானம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கல்வி கற்கும் அதிர்ச்சியான நிலைமையில் உள்ளனர். 2016‑ம் ஆண்டிலிருந்து இவ்வித இடப்பற்றாக்குறை நிலவும் நிலையில் இடவசதிக்கான எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை என்று பெற்றோர்கள்‑ஆசிரியர் கழகம் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் காளிமுத்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் “மாற்று இடத்தில் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன; விரைவில் உரிய தீர்வு காணப்படும்” என்று செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.