
திருச்சி விமான நிலையம், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களின் முக்கிய நுழைவாயிலாக மாறியுள்ளதாக கூறப்படும் சூழலில் அதற்கேற்றால் போன்ற சம்பவமொன்று நடந்துள்ளது
பேங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தபோது, ஒரு பயணியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அதற்கு பிறகு மேற்கொண்ட ஆய்வில், ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர் தர போதைப்பொருள் இருந்தது உறுதியாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ₹9.82 கோடி என மதிக்கப்படுகிறது. அதனை பறிமுதல் செய்து, அந்தப் பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எற்படுத்தியதையடுத்து சோதனை நடத்திய போது, அரிய வகை உடும்புகளை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக உயிரினக் கடத்தல் தடுப்பு விதிகளின்படி அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், வனத்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
வனத்துறையினர் அந்த உடும்புகளை பரிசோதித்துப் பார்த்து, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்ப வேண்டியதா அல்லது பறிமுதல் செய்ய வேண்டுமா என கலந்துறையாடி வருவதாக கூறப்பட்டுள்ளது
இந்த தொடர் நடவடிக்கைகள், திருச்சி விமான நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் சோதனை முறைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை காட்டுகிறது. மேலும், சர்வதேச தடைகள் மீறி சட்டவிரோதமான பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை செயல்படுகிறது என்பதற்கும் இது ஒரு உறுதியான சான்றாக அமைந்துள்ளது.