
பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே மேலபாலாமடை பகுதியை சேர்ந்த ஆறுமுக கனி (33) டிரைவராக வேலை செய்து வந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டு பழக்கத்தால், குடும்பம் மற்றும் சுயஉதவி குழுக்களில் கடன் வாங்கி தொடர்ந்து பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
பல லட்சம் கடனில் சிக்கிய நிலையில் குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த ஆறுமுக கனி, வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து உயிரிழந்த இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது சமூகத்தில் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.