
திருப்பூரை சேர்ந்த ப்ரீத்தி என்ற இளம்பெண், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்வருடன் ப்ரீத்தியின் திருமணம் நடந்தது. இதில் 120 சவரன் நகை, ₹25 லட்சம் ரொக்கம், ₹38 லட்சம் மதிப்பிலான கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு, மேலும் ₹50 லட்சம் கோரி சதீஸ்வரும், அவரது குடும்பத்தாரும் ப்ரீத்தியை அடிக்கடி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த ப்ரீத்தி, கடந்த மாதமாக தாயின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏண் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறி, ப்ரீத்தியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் இதற்கு முன் ரிதன்யா என்ற பெண், வரதட்சணை கொடுமையால் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது தமிழகத்தை உலுக்கியுள்ளது.