
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ் (30), வேல்முருகன் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பாண்டியன் மற்றும் அருள் ராஜ் கூலி வேலை செய்து வந்த நிலையில், இருவரும் சமீபத்தில் மாயமானது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்தது.
பாண்டியன் அடிக்கடி வெளியே சென்று சில நாட்கள் கழித்து வீடு திரும்பும் பழக்கமுடையவர். ஆனால் கடந்த 28ஆம் தேதி அருள் ராஜ் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, சகோதரன் வேல்முருகன், தெர்மல் நகர் போலீசில் புகார் அளித்தார். அதே சமயம், பாண்டியனும் மறுநாள் மாயமானார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், பண்டுகரை ஓடை பகுதியில் உள்ள நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் கவனித்தனர். அருகில் சென்று பார்த்தபோது, மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு மனிதனின் கை வெளியே தெரிந்தது.
உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோபா ஜென்ஸி, ஜெயந்தி மற்றும் தாசில்தார் முரளிதரன், கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா உள்ளிட்டோர் விரைந்து வந்து மண்ணை தோண்டியபோது, இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அது அருள் ராஜ் மற்றும் பாண்டியன் உடல்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் கடந்த 26ஆம் தேதி அருள் ராஜுக்கும், பண்டுகரை பகுதியில் கஞ்சா போதையில் ரகளை செய்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதனால் வெறுப்படைந்த கும்பல், அருள் ராஜை வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் சென்று பண்டுகரை ஓடையில் கொலை செய்தது. பின்னர் அங்கு வந்த பாண்டியனையும் தாக்கி கொலை செய்து, இருவரையும் புதைத்தது தெரியவந்தது.
இந்த பயங்கர சம்பவம், நாய்கள் ஒருவர் கையை கடித்து இழுத்ததால் வெளிச்சம் வந்துள்ளது. தற்போது சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இரட்டை கொலை தொடர்பான வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.