
திருநின்றவூரில் பிளஸ்-2 முடித்த மாணவி காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படிப்பு முடித்துவிட்டு தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார். தந்தையை இழந்த இவர், வீட்டிட்கு அருகே இருக்கும் வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய, எதிர்ப்புகள் எழுந்து காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை யாரும் இல்லாத நேரத்தில் அக்காவின் செல்போனை எடுத்துக் காதலருக்கு போன் செய்துள்ளார் . ஆனால் அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது .
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் ஐடியிலிருந்து “அம்மாவை நல்லா பாத்துக்கோ, எனக்கு இருக்கவே பிடிக்கல, செத்துவிடலாம் என்று தோணுது, பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க” என்று தனது அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காதல் விவகாரம் காரணமா அல்லது வேறு காரணமா என்பதை தெளிவுபடுத்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.