”வீடியோ போடுற வேலைலாம் வச்சிகாத… செத்து போயிடுவ” – சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்!

Social activist receives death threat from government bus driver for posting videos.


மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த வணங்காமுடி என்பவர், பேருந்து நிலையம் அருகில் மொபைல் சர்வீஸ் மற்றும் ஜூஸ் கடையை நடத்தி வருகிறார். சமூக ஆர்வலராக செயல்படும் இவர், தனது கடையில் உள்ள சிசிடிவி கேமரா வழியாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்து, பொதுநலனை கருத்தில் கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் பேருந்து நிலையத்தில் ஒரு அரசு பேருந்து பயணிகளை ஏற்றாமல் காலியாக புறப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது

இதை பதிவு செய்த வணங்காமுடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 14 ஆம் தேதி மதியம், ஒரு பேருந்தின் ஓட்டுநர் அவருடைய கடைக்கு வந்து, “அந்த வீடியோவ நெட்ல போட்டது நீதானா? நீ என்ன போலீசா?” என கேள்வி எழுப்பி, ரவுடி போல் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வணங்காமுடி , “தண்ணி போட்டுட்டுதான் வண்டி ஓட்டுறீங்களா?” என கேட்டதற்கு, அந்த ஓட்டுநர் “ஆமா, போதைல தான் இருக்கேன்… இனிமே வீடியோ போடுற வேலை வச்சிக்காத. இல்லன்னா செத்து போயிடுவ…” எனக் கூறி, நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துப் சென்றுள்ளார்

கடையின் சிசிடிவியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதையடுத்து தற்போது அந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதால், சோழவந்தான் காவல் நிலையத்தில் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக நலனுக்காக செயல்படும் ஒரு நபருக்கு, இந்த அளவிற்கு நேரடி மிரட்டல் விடுக்கப்படும் நிலைமை கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.