
மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, சமீபத்தில் குஜராத் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். “241 பேர் உயிரிழந்த இந்த சோக நிகழ்வு அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், ஆதரவையும் தெரிவிக்கிறேன்” என அவர் கூறினார்.
அடுத்து, பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், “இத்தகைய கூட்டணிக் கேள்விகளை எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும். கூட்டணிக்கான நிலைமைகளை அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார். எங்களிடம் குழப்பங்களை உருவாக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் மேற்கொண்ட அவர், “ஒரு முன்னாள் முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது மக்கள் மரியாதையை இழக்கக் கூடிய செயல். மக்களிடையே தற்போது முதலமைச்சருக்கு மதிப்பும் நம்பிக்கையும் குறைந்து விட்டது” என்றார்.
மதுரை நகரின் வளர்ச்சிக்குப் பின்னால் அ.தி.மு.க. ஆட்சியின் பல்வேறு திட்டங்களும், ₹8000 கோடி நிதி ஒதுக்கீடும் முக்கிய காரணங்கள் என கூறிய அவர், “அம்மா ஆட்சியில் தொடங்கப்பட்ட குடிமராமத்து திட்டம் தான் முதன்முறையாக மக்களின் வாழ்வு முறையை மேம்படுத்தியது” என்றார்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களில் தி.மு.க. அரசு தனது பெயர் சிட்டிகையடிக்கிறது என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர் என்றும் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.