
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த திருஞானசெல்வத்தின் மகள் விபூஷ்னியா மற்றும் மருமகன் லோகேஸ்வரன் இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்காக இந்தோனேசியா சென்ற தம்பதி, அங்கு கடலில் படகில் சென்று ‘போட்டோ ஷூட்’ நடத்தி கொண்டிருந்த போது, கடல் அலை காரணமாக நிலை தடுமாறி இருவரும் நீரில் விழுந்தனர். இதில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன என்றும், சுற்றுலா நிறுவனம் இவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாமல் அங்கு அழைத்துச் சென்றது எனவும் தெரிவித்த திருஞானசெல்வம், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சுற்றுலா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அதில், “சுற்றுலா நிறுவனத்தின் அஜாக்கிரதையும் தவறான வழிகாட்டுதலும் இந்த விபத்துக்கு காரணம். எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த சுற்றுலா நிறுவனம், “எங்கள் எச்சரிக்கையை அவர்கள் பின்பற்றவில்லை. எனவே இது எங்களது தவறு அல்ல” என பதில் மனு தாக்கல் செய்தது.
இருப்பினும், மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், “சுற்றுலா நிறுவனத்தினால் வழங்க வேண்டிய சேவையில் குறைபாடு இருந்துள்ளது. அதனால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது” என தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, சேவை குறைபாட்டுக்காக ரூ.1.50 கோடியும், மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.1.60 கோடியை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்கக் கட்டளையிட்டது.