மன உளைச்சலில் மருத்துவர் தற்கொலை – தர்மபுரியில் சோக சம்பவம்!

Doctor from Dharmapuri commits suicide due to depression, leading to a tragic incident in the area.

தர்மபுரி மாவட்டம் ஹரிகரநாத கோயில் தெருவைச் சேர்ந்த 27 வயதான மருத்துவர் மோனிகா, தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். தினசரி பணிகளைப் போல், சம்பவம் நிகழ்ந்த நாளும் இரவு தனது தனி அறையில் ஓய்வு எடுத்திருந்தார்.

அடுத்த நாள் காலை, நோயாளிகள் தொடர்ச்சியாக வந்த நிலையில், மருத்துவர் மோனிகா வராததைப் பார்த்த செவிலியர், அவரது அறைக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால் சந்தேகமடைந்த செவிலியர், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, மோனிகா கையில் நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் ஊசியை செலுத்திய நிலையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்

உடனடியாக கதவை உடைத்து உள்ளே புகுந்த மருத்துவ ஊழியர்கள், அவரை மீட்டு அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி  மோனிகா உயிரிழந்துள்ளார் .

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மோனிகா, சமீபத்தில் அவரது பெற்றோர் பார்த்த மணமகன் மீது விருப்பமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் எனவும், இது குறித்து தனது தோழியிடம் தெரிவித்திருந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் இந்த  முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.