
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற திமுகவின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் உயர் மின் விளக்கு கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி மக்களவை உறுப்பினரான ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்கு கம்பம் திடீரென சாய்ந்துள்ளது
அந்தச் சமயத்தில், மேடையில் பேசிக் கொண்டிருந்த ஆ.ராசா, மின்விளக்குகள் விழுவதை கண்டு சுதாரித்து கொண்டு அங்கிருந்து விலகியதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது
மேலும் நூலிழையில் ஆ.ராசா அவர் உயிர் தப்பியதாகவும் ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் கூட பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அந்த மின்விளக்குகள் நேராக மைக் மீது விழுந்ததையடுத்து நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதுடன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
பருவநிலை காரணமாக மயிலாடுதுறையில் வீசிய சூறைக்காற்றால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
திமுகவின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில் ஏற்பட்ட இந்த விபத்து சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.