
வடகிழக்குப் பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் ரூ.78.87 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
சென்னையில் அதிக மழை பெய்தாலும் நீர் தேங்காமல் உடனடியாக வடிகால் வசதி அமைய வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல், தடுப்புச்சுவர் உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் போன்ற பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதேபோல், திரு.வி.க. நகர் ஆன்ஸ்லி கால்வாயில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டிலும், தண்டையார்பேட்டை மண்டல வியாசர்பாடி கேப்டன் காட்டன் கால்வாயில் ரூ.6.85 கோடி மதிப்பீட்டிலும், கொடுங்கையூர் கால்வாயில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் தொடங்கப்பட்டன. மொத்தம் ரூ.78.87 கோடி மதிப்பில் தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், நீர்வளத்துறையின் மூலம் எண்ணூர் சிற்றோடை பாலம், கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், புழல் உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் ரூ.32.90 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழைக்கு முன் அவை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.