‘ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது’: ஜெய்சங்கர்

புதுடில்லி: எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசுபவர்கள் அதன் உணர்வை காக்க தவறிவிட்டனர்.

எமர்ஜென்சிக்கு இன்னும் மன்னிப்பு கேட்காதவர்களிடம், அரசியலமைப்பு சட்டம் பற்றி நீங்கள் எப்படி மரியாதையை எதிர்பார்க்க முடியும். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி சுற்றி திரிவதால் எதுவும் நடக்காது. அதனை மனதார மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை பிறப்பித்தார். 1975ம் ஆண்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது நான் ஒரு மாணவனாக இருந்தேன். அப்போது நான் கற்றுக்கொண்ட பாடம், சுதந்திரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பது தான்.

எமர்ஜென்சியின் போது, அரசியலமைப்பு 5 முறை திருத்தப்பட்டு அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எமர்ஜென்சி கொண்டு வந்ததற்காக இந்திராகாந்தி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதும், நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் அதை எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது என்பதை நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்.