திருவண்ணாமலை கோவிலில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி: பரிகார பூஜை வீடியோ வைரல் 

Couple performing atonement pooja at Thiruvannamalai temple after eating non-vegetarian food

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பலத்த சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதும், கோவில் பரிசுத்தம் சிறப்பாக காக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், கோவிலின் 5ம் பிரகாரத்தில் உள்ள ராஜகோபுரம் அருகே நேற்று நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தம்பதி ஒருவர் அசைவ உணவான முட்டை குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவியை பாற்சலில் கொண்டு வந்து கோவில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டதை அப்பாதையில் சென்ற சிலர் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைவில் அங்கு வந்த பெண் காவலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் “நாங்கள் உள்ளூர்தான், தினமும் இங்கு வந்து தான் சாப்பிடுகிறோம். இப்போது கையில் பணம் இருந்ததால் முட்டை குஸ்கா வாங்கி வந்தோம்” என பேசியுள்ளார்.

இதனை அங்கிருந்த பெண் காவலர் கண்டித்ததோடு, தம்பதியை கோவில் நிர்வாக அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதையடுத்து, மேலதிக நடவடிக்கைக்காக அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

கோவில் நிர்வாகம் சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையின் பின்னர், தம்பதியிடம் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

இந்த சம்பவத்தின் பின்பு , கோவில் பரிசுத்தத்தை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் சந்நிதியில் கலச பூஜைகள் உள்ளிட்ட பரிகார பூஜைகள் நடைபெற்றன. அசைவ உணவு சாப்பிடப்பட்ட பகுதிகளில் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன