தொகுதி மறுசீரமைப்பு – முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் முன்வைத்த முக்கியக் கருத்துகள் !!

Constituency Restructuring - Key Points Raised by CM M.K. Stalin and Other Leaders

முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பை ஏற்று முதல் கூட்டு நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் பவன் கல்யாண் கட்சி வரை உள்ளிட்ட 25 தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மொழிகள், இனங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடு, உடைகள், உணவுகள் என பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளன. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சியுடன் செயல்பட்டால் தான் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும்” எனக் கூறினார்.       

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் “மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது”, இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டும் அல்ல, அதிகாரம் மற்றும் எதிர்கால நலன்களை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளும் ஒரு குழுவை முன்மொழிகிறேன்” எனக் கூறினார்.

பினராயி விஜயன்

“தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் கேரளா மற்றும் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும்” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலமாக உள்ளதாகக் கூறிய பினராயி விஜயன், “எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம். மாநில அரசுகளுடன் அவசியமான உரையாடலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ” மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்தன. நாட்டின் நலனுக்காக இவை செயல்படுத்தப்பட்டன. இதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

தெலுங்கான, பஞ்சாப் முதல்வர்கள்

கேரள முதல்வரின் கருத்தை தனது பேச்சில் குறிப்பிட்ட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பா.ஜ.க நம்மைப் பேசவே விடுவதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். கட்சி வேறுபாடுகளைக் கடந்து போராட வேண்டும். டெல்லியில் இதற்கான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க வேண்டும்” எனக் கூறினார்.

“தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாமல் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்” என பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குறிப்பிட்டார். மேலும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆம் ஆத்மி 100% ஒத்துழைப்பு வழங்கும் என கூறினார்.