சேலத்தில் மாருதி காரில் 15 மாணவிகள் கதவில் தொங்கியபடி பயணம் செய்ததால்  பரபரப்பு!

15 மாணவிகள் கதவில் தொங்கியபடி பயணம் செய்ததால் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதியில் ஒரு மாருதி ஈகோ காரில் 15க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே நேரத்தில் அழைத்து வந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் போதிய இடம் இல்லாத காரணத்தால், இரண்டு மாணவிகள் காரின் கதவு பக்கமாக தொங்கியபடி பயணித்தது அந்த பகுதியில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வைரலானதும், அது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

முல்லைவாடி பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை அந்த கார் மாணவிகளை ஏற்றி சென்ற நிலையில், அந்த வீடியோவைக் கண்ட ஆத்தூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையின் போது காரை ஓட்டி வந்தவர் சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சரவணகுமார் என்பதும், மாணவிகள் ஆத்தூரில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், அதிக மாணவிகளை அழைத்து வர வேண்‌டும் என்பதால் காரின் இருக்கைகள் அகற்றப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், ஒரே வாகனத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவிகளை கூட்டிச் சென்றது முற்றிலும் விதிமீறலாகும்.

இது குறித்து வீடியோவை அடிப்படையாகக் கொண்டு அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும். அவசியமெனில் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.