
சென்னையில் கணவன் மனைவி எனக் கூறிய காதலர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூரில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு கல்லூரி மாணவர்களான ஆகாஷ் மற்றும் அபிநயா வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக தங்கி வாழ்ந்துள்ளனர்
இருவரும் ஒரே கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளதுடன் கடந்த சில ஆண்டுகளாக காதலில் இருந்த இருவரும், பெற்றோரிடம் வேலைக்குச் செல்வதாகக் கூறி சென்னை வந்துள்ளனர்.
சம்பவ நாளன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது கடும் தகராறாக மாறிய நிலையில், ஆகாஷ் தனது காதலியை தாக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பக்கத்து வீட்டில் வசித்த ஒருவர் ஜன்னல் வழியாக ஆகாஷ் தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, காதலர்கள் இருவரும் மரணமடைந்திருந்ததை கண்டுள்ளனர். அபிநயாவின் உடலில் புறக்காயங்கள் அதிகமாக இருந்துள்ளதால் இறப்பதற்கு முன்னர் பலமாக தாக்க பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து பேரதிர்ச்சியுடன் தகவல் தெரிவித்துள்ளனர்.
அபிநயாவின் தாய் அஞ்சலை அளித்த பேட்டியில், தனது மகள் அபிநயா வேலைக்குச் செல்வதாகக் கூறி 20 நாட்களுக்கு முன்பு சென்னை வந்ததாகவும் , அவர் தனியாக வேலைக்கு வருவதாக தான் தாங்கள் நினைத்து இருந்ததாகவும், ஆனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற பையன் சென்னை வந்ததும் இருவரும் வீடு எடுத்து தங்கியதும் தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
தங்களின் மகளை ஆகாஷ் அடித்துக் கொலை செய்துவிட்டு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அஞ்சலை தெரிவித்துள்ளார்.