
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு தோட்டம் அமைந்துள்ளது. இங்கு வேடச்சந்தூர் சேர்ந்த தங்கப்பாண்டியன் (32) தந்தை மூர்த்தி (65), மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறில், தங்கப்பாண்டியனின் தம்பி மணிகண்டன் தனது தந்தை மூர்த்தியை தாக்கி காயப்படுத்தினார். தகவலின் பேரில் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் ஆயுதப்படை காவலர் அழகுராஜா சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, மணிகண்டன் அரிவாளுடன் அவர்களைத் தாக்கியதில் சண்முகவேல் படுகாயமடைந்து உயிரிழந்தார். மேலும், தோட்ட மேலாளர் கனகராஜ், தொழிலாளர்கள் மற்றும் காவலர் அழகுராஜாவும் தாக்குதலுக்குள்ளானார்கள்.
இதையடுத்து, மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் திருப்பூர் எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர். இதே நேரத்தில், முக்கிய குற்றவாளி மணிகண்டனை கைது செய்ய ஆறு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு தீவிர தேடுதல் நடந்தது.
இந்நிலையில், இன்று (ஆ.07) காலை போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய முயன்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து உதவி காவல் ஆய்வாளர் சரவணனை தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பிச் செல்ல முயன்ற மணிகண்டனை போலீசார் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.