
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த புல்கான் எனப்படும் ராஜேஷ், ஒரு காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக குற்றங்களிலிருந்து விலகி, பந்தல் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு திருந்தி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் ஒன்று சேர்ந்த கும்பல், ராஜேஷை ஓட ஓட துரத்தி, பட்டப்பகலில் கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் அவர்களை கையெடுத்து கும்பிட்டும், அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர், கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவனேஷ், சாய்குமார் மற்றும் ஒரு சிறாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, கடந்த 2008ஆம் ஆண்டு யுவனேஷின் தந்தையான செந்தில்குமாரை ராஜேஷ் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததாக போலீசாருக்கு யுவனேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் மற்ற நபர்களை தேடி வருகிறார்கள். அத்துடன், சிட்கெட் கிளைப் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் டிபி சத்திரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொதுமக்களிடையே பயத்தை உருவாக்கியுள்ளது.