
தேனி மாவட்டம், கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் – சுகன்யா தம்பதியரின் மகன் சாய் பிரகாஷ் (13), உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கால் பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவனான இவர் நேற்று மாலை வேளையில் பள்ளி முடிந்ததும், பள்ளியின் விளையாட்டுத் திடலில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
இதே நேரத்தில், தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சரவணனின் மகன் திபேஷ் (19), சென்னையில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர், இவர் தினமும் பயிற்சிக்காக அதே திடலுக்கு வந்து இரண்டு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்
இந்த நிலையில் திபேஷ் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் எறிந்த ஈட்டி தவறுதலாக அருகில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்த சாய் பிரகாஷின் தலையில் மோதி குத்தியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்
சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறிய நிலையில், உடனடியாக ஆசிரியர்கள் விரைந்து வந்து சிறுவனை தூக்கிக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சாய் பிரகாஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் படுகாயமடைந்த இந்தச் செய்தி, ராயப்பன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.