
திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான காமராஜர் பேருந்து நிலையம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், திருப்பதி மற்றும் பாலக்காடு போன்ற வெளிமாநில பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துகளுக்கு முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை பழனி செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியின் எதிரில், ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆரம்பத்தில் வாய்த் தகராறாக இருந்தது பின்னர் ஆத்திரத்துடன் முற்றிய சண்டையாக மாறியது.
இந்த மோதலின்போது, அருகிலிருந்த கடைகளில் இருந்து பாத்திரங்கள் எடுத்து வீசப்பட்டதாகவும், கடைகளின் சொத்துகள் சேதமடைந்ததாகவும் தெரிகிறது. மாணவர்களின் இந்த நிகழ்வால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் பரபரப்புடன் அச்சத்துடன் அங்கு இருந்து விலகினர்.
சம்பவத்தின்போது அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பு இல்லாதது குறித்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவம் முடிந்த பின்பே அங்கு வந்து விசாரணை நடத்தினர்