9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆயுதப்படை தலைமைக் காவலர் சசிகுமார் கைது!

Armed Reserve Head Constable Sasikumar arrested for sexually harassing a 9th-grade schoolgirl.


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார்.

அந்த பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகிய சசிகுமார், அவர்களின் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி படிக்கும் பள்ளியில் சமீபத்தில் “குட் டச் – பேட் டச்” எனும் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அப்போதுதான் சசிகுமார் தன்னிடம் நடத்திய தொல்லை பாலியல் வன்கொடுமை என மாணவிக்கு புரிந்தது. பின்னர் அவர் தன்னுடைய சக மாணவிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதைக் கேட்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியையிடம் கூறினர்.

உடனடியாக ஆசிரியர்கள் ஒன் ஸ்டாப் சென்டரை தொடர்புகொண்டு சிறுமிக்கு நடந்த கொடுமையை தெரிவித்தனர். இதுகுறித்து பாளை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் இருந்து புகாரை பெற்று, நேற்று முன்தினம் இரவு சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த சம்பவம் நெல்லை மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.