
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவும் ரோபோடிக்ஸும் ஒருங்கிணைந்த தானியங்கி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவமாகும். இந்நிறுவனம் தற்போது காஞ்சீபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்திக்கான தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ரூ.300 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த ஆலை, 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
இதனுடன், எஸ்.ஒ.எல். இந்தியா பிரைவேட் லிமிடெட், இத்தாலியைச் சேர்ந்த எஸ்.ஒ.எல். எஸ்.பி.எ. மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் காற்று பிரித்தெடுக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
2019 மற்றும் 2024 உலக முதலீட்டாளர் மாநாடுகளில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, ரூ.175 கோடி முதலீட்டில் இந்த ஆலை உருவாகியுள்ளது.
இவ்விரு தொழில்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆறு மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்கும் கடிதங்களும் வழங்கப்பட்டன.
இந்த முதலீடுகள் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், தமிழகத்தின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.