
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மெட்ரோ திட்டத்தின் கட்டம் 2-ல் உள்ள வழித்தடம் எண் 3 (மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் II மெட்ரோ வரை), வழித்தடம் எண்4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் எண்5 (மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய மூன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் ஆகியவை அடங்கிய 118.9 கி.மீ. நீளத்திற்கு, ரூ. 5870 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் வழங்கினார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 முக்கிய வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகள் வழங்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தின் பயணிகள் சேவை தொடங்கும் நாள் முதல் 12ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தால், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ சேவையை இயக்கிய அனுபவம் வாய்ந்த டெல்லி மெட்ரோ நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் பராமரிப்பு வழங்கியுள்ளது, சேவையின் திறனை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.